கூத்தாநல்லூர் நகராட்சியின் நகர மன்ற தலைவியாக திமுகவை சேர்ந்த பாத்திமாபஷீராதாஜ் என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் சட்டத்திற்கு புறம்பாக தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள திமுகவைச் சேர்ந்த 15 நகர மன்ற உறுப்பினர்கள் நகரமன்ற தலைவி பாத்திமாபஷீராதாஜ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை தனித்தனியாக நகராட்சி ஆணையர் கீர்த்திகாவிடம் மனு அளித்தனர். இந்நிலையில் அன்று மாலை 4 மணிக்கு கூத்தாநல்லூர் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற இருந்த நகர மன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர் யாரும் பங்கேற்காததால் கூட்ட அரங்கு வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின் கீழ் கூத்தாநல்லூர் நகராட்சி நகர மன்ற உறுப்பினர்களால் நகர மன்ற தலைவர் மீது அளிக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி புதன்கிழமை காலை 10: 30 மணிக்கு கூத்தாநல்லூர் நகராட்சி நகர மன்ற கூட்டறங்கில் நடைபெற உள்ளது தவறாமல் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் கீர்த்திகா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.