திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருத்தி சாகுபடி குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். விவசாயிகள் நெல் சாகுபடி செய்யும் நேரங்களில் இயற்கை பேரிடரினால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக பருத்தி சாகுபடி செய்வார்கள். சம்பா நெல் அறுவடை முடிந்த பிறகு தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதல் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்ய துவங்குவார்கள். விவசாயிகளுக்கு பருத்தி விதையின் தரம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
இதனால் விளைச்சலும் ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது. பருத்தி விவசாயிகளின் குறைகளைக் கேட்கவில்லை என்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளை பேச விடவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். "தனியார் நிறுவன பிரதிநிதிகளை கலந்துரையாடல் கூட்டத்தில் பேச செய்தால் விளக்கங்களைப் பெற்றிருக்க முடியும். அதற்கு அனுமதிக்கவில்லை" எனவும், பருத்தி விவசாயிகள் குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும் கூறினர். இதுகுறித்து தமிழக விவசாயிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் சேதுராமன் சொல்லும்போது "பருத்திக்கான விதையின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். பருத்தி சாகுபடியை தனியாருக்குத் தாரை வாரிக்க அனுமதிக்க முடியாது" என கூறினார்.