திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. நன்னிலம் அருகே கோணவாய்க்காலில் வெங்காய தாமரை செடிகள் மண்டியிருப்பதால் தண்ணீர் செல்ல முடியாமல் விளைநிலங்களுக்குள் செல்கிறது. பண்ணைநல்லூர், அண்ணாப்புரம், சிறுபுலியூர், பாவட்டகுடி, பன்னூர், வாளூர், காளியக்குடி, நெடுங்குளம், தென்குடி, திருச்சிருக்குடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏக்கருக்கு 20000 ரூபாய் வரை செலவு செய்த நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவும் அதிகாரிகள் நேரில் பார்வையிடவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.