திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டத்தை அடுத்துள்ள கூத்தனூர் கிராமம் கவிசக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் பெயரால் போற்றப்படும் தொன்மை சிறப்புமிக்க ஊர்.
இவ்வூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கமலாக்ஷி சமேத ஸ்ரீஹரிநாதேஸ்வர சுவாமி ஆலயத்தின் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த இரு தினங்களாக 4 கால யாகசாலைபூஜைகள் ஏராளமான வேதவிற்பன்னர்களைக்கொண்டு 108 வகையான மூலிகை பொருட்களைக்கொண்டு யாகவேள்வி பூஜைகள் விமர்சையாக நடைபெற்றது.
இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜையின் நிறைவாக மகா பூர்ணாகதி பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து யாகசாலையில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தினை வலம்வந்து மூலஸ்தான விமான கசலம் மற்றும் ஆலய பிரகாரங்களில் உள்ள சன்னதி கோபுர விமான கலசங்களை அடைந்து பூஜைகளை நடத்தினர். இதனை தொடர்ந்து மூலஸ்தான கோபுர விமான கலசம் மற்றும் ஆலய பிரகார சன்னதிகளின் கலசங்கள் மீது யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.