நன்னிலம் பகுதியில் கூலித்தொழிலாளி கம்பியால் குத்தி கொலை ஒருவர் கைது. "
மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் 38 வயதுடைய கிருபாகரன் மற்றும் 28 வயதுடைய நிவாஸ் ஆகிய இருவரும் நன்னிலம் பகுதியில் கடந்த சில மாதங்களாக இந்து சமய அறநிலைத்துறை சார்பாக, நன்னிலம் பகுதியில் உள்ள கைலாசநாதர் கோவில் இடத்தில் ஆறு ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் திருமண மண்டபத்தில் கடந்த ஆறு மாதங்களாக தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றிய நிலையில் நிவாஸ் கம்பியால் கிருபாகரன் விலா பகுதியிலும் வாய் பகுதியிலும் குத்தியுள்ளார். அருகில் இருந்த மற்றவர்கள் கிருபாகரனை உடனடியாக நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி கிருபாகரன் உயிரிழந்தார். கம்பியால் குத்திய நிவாஸ் நன்னிலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கிருபாகரன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கொலை செய்யப்பட்ட கிருபாகரன் மற்றும் நிவாஸ் ஆகிய இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.