கும்பகோணம் மன்னார்குடி செல்லும் சாலையில் ஆலங்குடி குரு ஸ்தலம் அமைந்துள்ளது. எனவே இங்கு பல மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருவதால் எப்பொழுதும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் இன்று காலை கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த ஒரு அரசு பேருந்தும், ஒரு தனியார் பேருந்தும் அதிவேகத்தில் வந்தன. எதிரே ஒரு தனியார் பேருந்து வந்தபோது நிலை தடுமாறி அரசு பேருந்து ஓரம் கட்ட, பின்னால் வந்த தனியார் பேருந்து மற்றொரு தனியார் பேருந்து மீது மோதி நின்றது. இதனால் இரண்டு தனியார் பேருந்துகளும் கடுமையாக சேதம் அடைந்ததுடன் அரசு பேருந்தும் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை
மேலும், கும்பகோணம் மன்னார்குடி சாலையில் வாகனங்கள் அனைத்தும் அதிவேகத்தில் பயணிக்கின்றன என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பயணிகளை ஏற்றுவதற்காகவும், விரைவாக செல்வதற்காகவும் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு இந்த சாலையில் பயணிக்கின்றன. ஆகவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கும்பகோணம் மன்னார்குடி சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.