சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உணவுத் திருவிழாவில் அனைத்து மாவட்டங்களின் பிரபல உணவு வகைகளும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா சென்னை மெரினா கடற்கரையில் நேற்று தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளையும் உண்டு மகிழ்ந்தார். இந்த உணவு திருவிழாவானது டிச. 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. பார்வையாளர்கள் மதியம் 12.30 முதல் இரவு 8.30 வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
அனுமதி இலவசம். உணவுத் திருவிழாவில் 65 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மகளிர் மூலம் மொத்தம் 35 உணவு அரங்குகள், 7 தயார் நிலை உணவு அரங்குகள் அமைக்கப்பட்டு 100 வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. உணவுப் பட்டியலை ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் 'க்யூ-ஆர்' கோடுகளை ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ளலாம். பார்வையாளர்கள் பணம் செலுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கவுன்ட்டர்களில் 'க்யூ-ஆர்' கார்டுகளை 'டாப்-அப்' செய்து அரங்குகளில் இருக்கும் உணவுகளை பெற்றுக்கொள்ளலாம்.