கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது, திருப்பந்தியூர் ஊராட்சி. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள விநாயகர் கோவில் தெருவில், 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் மின்கம்பங்கள் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால், மரக்கம்புகளை அமைத்து, மின் ஒயர்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மின் ஒயர்கள் தெருக்களில் மிகவும் தாழ்வான நிலையில் தொட்டு விடும் துாரத்தில் உள்ளது. மேலும் அடிக்கடி அறுந்தும் விழுகின்றன. இதனால், இவ்வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் அப்பகுதிவாசிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதிவாசிள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு மின் ஒயர் அறுந்து விழுந்ததில், இப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியானார். எனவே, மாவட்ட நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் மின்கம்பங்கள் அமைத்து, மின் ஒயர்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.