எர்ணாவூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராமசேகர். இவரது மனைவி அன்னசெல்வி (48), வீட்டு வாசலில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நபர், சாக்லேட் வேண்டும், எனக் கேட்டுள்ளார்.
இதையடுத்து, அன்னசெல்வி, டப்பாவில் இருந்து சாக்லேட்டை எடுத்துக் கொடுத்துள்ளார். அப்போது, திடீரென அன்னசெல்வி கழுத்தில் கிடந்த 3 சவரன் செயினை அறுத்துக் கொண்டு அந்த நபர் தப்பியோடினார். உடனே, அன்னச்செல்வி திருடன்… திருடன்… என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் விரட்டிச் சென்று அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற அந்த நபரை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து எண்ணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த அம்ம முத்து (29) என்பதும், இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பிழைக்க வந்ததும், போதிய வருவாய் இல்லாததால், வழிப்பறி செய்து அதில் சொகுசாக வாழ்ந்து வந்ததும் தெரிந்தது. இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளன. இதையடுத்து அம்ம முத்துவை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 7 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.