மணலி புதுநகர் அருகே விச்சூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் கிடங்கு உள்ளது. அதில் ஒரு இடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது. அக்கிடங்கு முழுவதும் பெயிண்ட் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருப்பதால், தீ மளமளவென பரவி கிடங்கு முழுவதும் எரியத் தொடங்கியது.
இச்சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர், வ. உ. சி நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது மட்டுமல்லாது 3 ஸ்கை லிஃப்ட் வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் பெயிண்ட் தயாரிப்பதற்கான இரசாயன மூலப்பொருட்கள் கொண்ட பேரல்கள் வெடித்து சிதறியதால், தீயை கட்டுக்கு கொண்டுவருவதில் சிக்கல் நீடித்தது. மேலும் கூடுதலாக தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியிலும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். வானளவு கரும்புகை எழுந்துள்ளதால், அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளித்தது.
அங்கு கூடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்திய காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.