திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு மலையடிவாரப் பகுதியில் இருந்து ஆட்டோக்கள் மலை மீது பக்தர்களை ஏற்றி செல்வதற்கு கட்டணம் நிர்ணயம் செய்து ரூபாய் 30 வசூலித்து வருகின்றனர். திருக்கோயில் நிர்வாகம் வசூலிக்கும் இந்த தொகையை வசூலிக்கக்கூடாது, ஒரு நாளைக்கு நான்கைந்து முறை நாங்கள் வருவோம். ஒரு முறை மட்டுமே கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் பேசுமாறு காவல் துறை சார்பில் அறிவுறுத்தினர். இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில், கோரிக்கை குறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று திருத்தண மலைக் கோயிலுக்கு செல்லும் பாதை மற்றும் திரும்பி வரும் பாதை ஆகிய இடங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களையும், தடுப்புகளையும் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மலைக் கோயிலுக்கு செல்பவர்கள் மற்றும் சாமி தரிசனம் முடிந்து திரும்பியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் ஆட்டோ ஓட்டுனர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்ததையடுத்து ஆட்டோ ஓட்டுனர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இதனால் திருத்தணி முருகன் கோயிலில் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.