திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்த, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஐந்து அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களில் ஒருவரை அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்து, மீதமுள்ள நான்கு பேர் அறங்காவலர்களாக நியமிக்கப்படுவர். அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, வளர்ச்சி பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றுவர். இந்நிலையில், 2021ல், தி. மு. க. , தலைவர்
ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்றது முதல், நேற்று முன்தினம் வரை, திருத்தணி முருகன் கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், நேற்று, திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்னை அண்ணா் நகர் சாந்தி காலனியைச் சேர்ந்த ஸ்ரீதரன், திருத்தணி பொன்பாடியைச் சேர்ந்த உஷா ரவி, திருத்தணி - சித்துார் சாலையைச் சேர்ந்த மோகனன், திருத்தணி ஜோதி நகரைச் சேர்ந்த நாகன் மற்றும் திருத்தணி ஒன்றியம், சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு என, மொத்தம், ஐந்து பேர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், நாகன் மற்றும் உஷா ரவி, 2006ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை அறங்காவலர்களாக பணியாற்றி உள்ளனர். இவர்கள் மீண்டும் தற்போது அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.