திருவாலங்காடு அடுத்த கூடல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் வரதன் மகன் சீனிவாசன் 51. இவர் அதே கிராமத்தை சேர்ந்த ராகவன் என்பவருக்கு சொந்தமான வேணுகோபாலபுரம் கிராமத்தில் உள்ள நிலத்தில் இருந்து கிராவல் மணலை டிராக்டர் வாயிலாக கடத்துவதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவாலங்காடு போலீசார் திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை கூடல்வாடியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிராவல் மணல் ஏற்றி வந்த இரண்டு டிராக்டர் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரத்தை சோதனை செய்தனர். அப்போது அரசு அனுமதியின்றி கிராவல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் சீனிவாசன், டிராக்டர் ஓட்டுநர்கள் வீரராகவபுரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ், அரக்கோணம் பருத்திபுதூர் பகுதியைச் சேர்ந்த சேகர் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.