புதிய மின் இணைப்புக்கு ரூ. 3000 லஞ்சம் கேட்ட உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருத்தணி அருகேயுள்ள கனகம்மாசத்திரம் பகுதியில் வசிப்பவர் பாபு(41). இவர், கனகம்மா சத்திரம் பஜார் வீதியில் கடை நடத்தி வருகிறார். தனது கடைக்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்காக, கனகம்மா சத்திரம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதனால் கனகம்மாசத்திரம் மின்வாரிய உதவி மின் பொறியாளர் புஷ்பராஜ், மின் இணைப்பு கொடுக்க ரூ. 3000 லஞ்சம் கேட்டுள்ளார்.
வறுமையில் உள்ள தன்னால் கட்டணத்தை தவிர லஞ்சம் கொடுக்க முடியாது என்று பாபு தெரிவித்துள்ளார். ஆனால் உதவி மின் பொறியாளர் புஷ்பராஜ் ரூ. 3000 லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு கொடுக்க முடியும் என்று திட்ட வட்டமாக கூறி அனுப்பி விட்டார். இதுகுறித்து பாபு திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று காலை ரசாயனம் தடவிய ரூ. 3000ஐ பாபுவிடம் கொடுத்து அனுப்பினர்.
அவர் அந்த பணத்தை, மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று உதவி மின் பொறியாளர் புஷ்பராஜ்யிடம் கொடுத்தார். பணத்தை அவர் வாங்கிய போது, சாதாரண உடையில் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திர மூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா மற்றும் போலீசார் புஷ்பராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.