அம்மையார்குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள குளம், மரங்கள் வளர்ந்து சீரழிந்து கிடந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அம்மையார்குப்பத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது.
கிராமத்தில், ஏராளமான ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டும் தீர்வு எட்டப்படவில்லை.
இதையடுத்து, கான்கிரீட் சாலைகள் உடைக்கப்பட்டு, வீட்டு குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட அவலமும் அரங்கேறியது.
தண்ணீருக்காக, பகுதிவாசிகள் தினசரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கிராமத்து இளைஞர்கள், நீராதாரத்தை பேணிக்காக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் சீரழிந்து கிடந்த குளத்தை புனரமைக்கவும் களம் இறங்கினர்.
நுாற்றுக்கணக்கான இளைஞர்கள், குளத்தில் வளர்ந்திருந்த மரங்களை வெட்டி அகற்றினர்.
தொடர்ந்து குளத்தை சீரமைக்க நிதி தேவை என்பதால், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தற்போது அரசு நிதியுடன், இந்த குளம் துார் வாரப்பட்டு, முழு பரப்பளவை வெளிக்காட்டத் துவங்கியுள்ளது. படித்துறை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், அப்பகுதிவாசிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.