பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பழஞ்சூர் பகுதியில் தனியார் சர்வதேச உண்டு உறைவிட பள்ளி இயங்கி வந்தது. கரோனா ஊரடங்கு காலத்துக்குப் பிறகு, இந்தப் பள்ளி செயல்படாமல் மூடப்பட்டது. இந்தப் பள்ளி இயங்கி வந்த 5 ஏக்கர் அரசு நிலத்தை கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து செயல்பட்டு வந்தது. விதிமுறைகளை மீறி அதனை சுற்றியுள்ள சுமார் 20 ஏக்கர் நிலம் என மொத்தம் 25 ஏக்கர் நிலத்தை தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், பள்ளியின் நிலம் குத்தகை காலம் 2013-ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில், குத்தகை பாக்கி தொகையான ரூ. 23 கோடியை பள்ளி நிர்வாகம் செலுத்தாமல், அரசு நிலத்தையும் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது. இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் அறிவுறுத்தலின்பேரில், பூந்தமல்லி வட்டாட்சியர் ஆர். கோவிந்தராஜ் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் நசரத்பேட்டை போலீசார் தனியார் பள்ளிக்குச் சென்றனர். தனியார் பள்ளியின் ஒவ்வொரு அறைகளையும் பூட்டி வைக்கப்பட்டிருந்த பூட்டுகளை உடைத்து, அதிலிருந்த ஆவணங்களை எடுத்து வைத்துவிட்டு, விடியோ பதிவு செய்து பள்ளி வளாகம் முழுவதையும் இன்று(செப்.17) "சீல்' வைத்தனர்.