செங்குன்றம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி சாலையோர கம்பத்தில் மோதி விபத்து. படுகாயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு
சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செங்குன்றத்திலிருந்து ஆந்திரா நோக்கி டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி சாலையோர கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இதில் சாலையில் வைத்திருந்த எச்சரிக்கை பலகை உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் லாரியின் முன் பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் ஓட்டுநர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக லாரி ஓட்டுநரை மீட்டு அருகிலுள்ள பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விசாரணையில் திருவண்ணாமலையை சேர்ந்த லாரி ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் உயிரிழந்து தெரிய வந்தது. இதனையடுத்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி கம்பத்தில் மோதியதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.