சென்னை கீழ்ப்பாக்கம் கால்வாய் சாலை முதல் சந்து பகுதியில் வசிப்பவர் வினோத். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடராஜ் என்பவர் தனது மனைவி சாந்தியுடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடராஜின் மனைவி சாந்தி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் நடராஜ் அன்றிலிருந்து மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்தி விட்டு வந்து வீட்டில் சலசலப்பை செய்து வந்துள்ளார். இதன் காரணமாக வீட்டு உரிமையாளர் வினோத் வாடகைக்கு குடியிருக்கும் நடராஜை கண்டித்ததுடன் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாக தெரிகிறது.
அப்போது மதுபோதையில் இருந்த நடராஜ், வீட்டு முன் நிறுத்தி வைத்திருந்த வினோத்துக்கு சொந்தமான இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். இதில் ஐந்து வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததை பார்த்து ஓடிவந்த வினோத் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றதுடன் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். இதில் இருசக்கர வாகனங்கள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் வினோத் டி.என்.பி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுபோதையில் இருசக்கர வாகனங்களை தீவைத்து கொளுத்திய நடராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.