மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் குமரன்.
இவரது மனைவி கவிதா. குமரன் மினி லோடு வேன் ஓட்டி வருகிறார். குமரன் வழக்கம் போல் வேலைக்கு சென்றிருந்த நிலையில், கவிதா பள்ளி நேரம் முடிந்து குழந்தைகளை அழைத்து வர சென்றிருந்தார். கவிதா பள்ளியில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கவிதா, உடனடியாக இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை
ஆய்வு செய்தனர். அப்போது உணவு டெலிவரி செய்வது போல் வந்த ஒரு நபர் வீட்டின்
சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றதும், பின்னர் திருடப்பட்ட பொருட்களுடன் அங்கிருந்து தப்பிச்
சென்றதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. பின்னர் போலீசார் நடத்தியவிசாரணையில் 15 சவரன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, 6000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட நபரின் இருசக்கர வாகன எண்ணை கொண்டு அவரைத் தேடி வருகின்றனர். பகல் நேரத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.