சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் நந்தினி என்பவர், மண்ணடி சாலையில் உள்ள காளிகாம்பாள் கோயிலைச் சேர்ந்த அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் ஒன்றை அளித்திருந்தார். கார்த்திக் முனுசாமி மயக்கம் மருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார். தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி நிபந்தனை ஜாமினில் வெளிவந்திருந்தார். ஆனால் கடந்த ஐந்து நாட்களாக அவர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி தலைமுறை வாங்கி விட்டதாகவும் அவர் தரப்பிலிருந்து தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் தற்போது நந்தினி புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நந்தினி, "கார்த்திக் முனிசாமி ஜாமினில் வெளிவந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களாக காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் இருக்கிறார். இதனால் எனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் தற்போது காவல் நிலையம் வந்துள்ளேன். எனது உயிர் ஆபத்து உள்ளது என்பதால் தான் நான் ஊடகங்களையும் தேடி வந்துள்ளேன்" என்று கூறினார்.