இயக்கத்துக்காகவே இயக்கமாகவே வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய மாமனிதர் நல்லகண்ணு என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நல்லகண்ணு குறித்த 'நூறு கவிஞர்கள் - நூறு கவிதைகள்' என்ற கவிதை நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, நூற்றாண்டு விழா நாயகராக இருக்கக்கூடிய நல்லகண்ணுவின் புகழை, சிறப்பை, அவர் தியாகத்தை இன்றைக்கு போற்றிக் கொண்டிருக்கிறோம். சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கான நம்முடைய பணியில் வெல்வதற்காக வாழ்த்துங்கள் என்று கேட்க வந்திருக்கிறோம்! உங்கள் வாழ்த்தைவிட எங்களுக்குப் பெரிய ஊக்கம் எதுவும் கிடைத்துவிட போவதுமில்லை.
பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்திருக்கிறது. 100 வயதைக் கடந்து நமக்கு வழிகாட்டியும், தமிழ்ச் சமுதாயத்துக்காக இன்னும் உழைக்கத் தயாராக இருக்கிறேன் என்றும், உள்ள உறுதியோடு இங்கே அமர்ந்திருக்கக்கூடிய அவருக்கு கம்பீரமான வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கம்பீரமான வணக்கம் மட்டுமல்ல, கம்பீரமான செவ்வணக்கத்தையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.