கொளத்தூர் ஜி.கே.எம். காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி ரோஜா. இவர்களது மூத்த மகள் பாவனா (7), கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளியில் கீழே விழுந்ததில் பாவனாவின் கால் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாள். அப்போது, எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்குமாறு கூறியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பாவனாவை அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்து சிகிச்சை அளித்து, வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். நேற்று காலை சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. திடீரென்று சுயநினைவிழந்த சிறுமியை, மீண்டும் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, மருத்துவர்களின் அலட்சியத்தால் சிறுமி இறந்ததாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.