திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் மகன் அஜய் நண்பர்களுடன் கொடைக்கானலுக்குச் செல்வதாக கடந்த 28-ஆம் தேதி கூறிச் சென்றவர், கடந்த செவ்வாய்க்கிழமை பெற்றோரைத் தொடர்பு கொண்டு, தாம் ஒடிசாவில் இருப்பதாகவும், தம்மை மர்ம நபர்கள் பிடித்து வைத்துக் கொண்டு பணம் கேட்பதாகவும் கூறி அழுததாகவும் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்ததின்பேரில் விசாரணை நடத்தி, திருவள்ளூர் காவல் துறையினர் ஒடிசாவுக்குச் சென்று பார்த்த போது, ரயில் நிலையம் அருகே காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மகன் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் புல்லரம்பாக்கம் காவல் துறையினர் ஆள் கடத்தல் வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த அபினேஷ் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியுடன் ஒடிசா சென்று கஞ்சா வாங்கி வந்த போது மர்ம நபர்கள் தாக்கியதில் அஜய் உயிரிழந்ததாகவும், அபினேஷ் தப்பிச் சென்ற நிலையில் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் காவல் துறையினர் அஜயின் உறவினர்களுடன் ஒடிசா செல்ல திட்டமிட்டுள்ளனர். கஞ்சா வாங்குவதற்காக ஒடிசா சென்று இளைஞர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.