சித்துார் - தச்சூர் இடையிலான ஆறு வழிச்சாலைக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்' என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். எண்ணுார், காட்டுப்பள்ளி துறைமுகங்களின் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், ஆந்திராவின் சித்துார் - திருவள்ளூர் மாவட்டத்தில் தச்சூர் இடையே, 126 கி. மீ. , க்கு ஆறு வழிச்சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு, 3, 127 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது. சாலை பணிக்கு, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை சுற்று பகுதிகளில், 880 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக, போராட்ட குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த போராட்ட குழுவின் ஆலோசனை கூட்டம், சென்னை மண்ணடியில் நேற்று நடந்தது. இதில், ஓய்வுப்பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, 'ஜெய் கிஸான் அந்தோலன்' விவசாயிகள் அமைப்பின் தலைவர் அவிக் ஷாகா, சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம் நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நில எடுப்பு பணிகள் துவங்கவுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின், ஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறியதாவது: சித்துார் - தச்சூர் சாலை திட்டம், கார்ப்ரேட் நிறுவனங்களுக்காக, உணவளிக்கும் விவசாயிகளின் நிலங்களை பறிக்கக்கூடாது. விவசாயிகள் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இப்பிரச்னை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் பொதுநல வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.