திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஊராட்சியை கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் பேரூராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடம்பத்தூர் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகளில் கடம்பத்துார் ஊராட்சியில் மட்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்னும் நுாறு நாள் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் பகுதிவாசிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்ப்பட்டனர். இந்நிலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவரும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றிருந்ததால் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி முற்றுகையிட்ட பெண்களிடம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று உங்களது கோரிக்கைகளை தெரிவியுங்கள் என கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது. கடம்பத்தூர் கிராம் ஊராட்சியில் பெரும்பாலானோர் இந்த 100 நாள் வேலை திட்ட பணிகளை நம்பியே வாழ்வாதாரத்தை கழித்து வருவதாகவும், பல்வேறு மாற்றுத்திறனாளிகளும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தொடர்ந்து ஊராட்சியாக செயல்படுத்த அனுமதிக்க வேண்டுமென பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.