திருவள்ளூர் பகுதியில் இருந்து சொகுசு காரில் சிலர் யானை தந்தத்தை கடத்தி செல்வதாக சென்னை வன விலங்குகள் குற்ற கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் திருவள்ளூர் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சென்னை வனத்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த கார் நிற்காமல் திருநின்றவூர் நோக்கி அதிவேகமாக சென்றுள்ளது, இதனை பின்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். திருநின்றவூர் அருகே வனத்துறை தங்களை பின்தொடர்ந்து வருவது தெரிந்துகொண்ட கடத்தல் காரர்கள் காரை வேகமாக இயக்கி வந்துள்ளனர்.
சாலையில் சென்ற சிலரை கடத்தல் காரர்கள் இடித்துத் தள்ளியுள்ளனர். முதியவர் ஒருவர் லேசான காயம் அடைந்துள்ளார். கடத்தல் காரர்களின் கார் திருநின்றவூர் அருகே குறுகலான சாலையில் காரை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். பின்தொடர்ந்து வந்த வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் காரை பறிமுதல் செய்து அதிலிருந்த தந்தத்தை மீட்டுள்ளனர். தப்பியோடிய கடத்தல் காரர்களில் ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவரை கைது செய்து திருவள்ளூர் வனத்துறை அலுவலகத்திற்குக் கூட்டிச்சென்று யானை தந்தம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட தந்தத்தின் மதிப்பு ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.