சென்னை, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர், ஆவடி அருகே திருமுல்லைவாயல், பாலாஜி நகரில் 7, 200 சதுரடி நிலத்தை பொது அதிகாரம் பெற்று வைத்திருந்த சுரேந்தர் என்பவரிடம், ரூ. 3. 66 கோடிக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அம்பத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் தனது தந்தை அருணாச்சலம் பெயரில் கிரையம் பெற்றிருந்தார்.
இதன் பிறகு மேற்கண்ட நிலத்தில் சுற்றுச்சுவர் கட்ட ஜெயச்சந்திரன் சென்ற போது, அந்த நிலம் வேறு நபர்களுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
மேலும், 2016ம் ஆண்டு மேற்கண்ட இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து குமார் என்பவருக்கு விற்பனை செய்த வழக்கில் போலீஸார் சுரேந்தர், பாபு ஆகியோர் கைது செய்துள்ளனர். அதே நிலத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆள்மாறாட்டம் நபர் மூலம், போலி ஆவணங்கள் தயாரித்து சுரேந்தர், பாபு, கமல் ஆகியோர் ஜெயச்சந்திரனுக்கு விற்பனை செய்துள்ளனர். ஆள்மாறாட்ட நபர் மூலம் பதிவு செய்த போலி ஆவணங்கள் எனதெரிந்தே பாராக்சூடா, ஹரிகுமார் மற்றும் சையதுமுகமது பாரூக் ஆகியோர் ஜெயச்சந்திரனுக்கு நிலத்தை விற்பனை செய்ய உடந்தையாக இருந்து முறையற்ற லாபம் அடைந்துள்ளனர். ஜெயச்சந்திரன் ஆவடி காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில் போலீஸார் வழக்கு பதிந்து, தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சம்பந் தமாக சுரேந்தர், பாபு, கமல், பாரக்சூடா, ஹரிக்குமார், சையது முகமது பாரூக் ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.