நெல்லை முபாரக் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம்

60பார்த்தது
நெல்லை முபாரக் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று 18/05/23 திருச்சியில் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் இலியாஸ் தும்பே சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேலும், கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, அச. உமர் பாரூக், நிஜாம் முகைதீன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், நாடாளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. தொடர்ந்து கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள்: 1. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தேர்தல் தொடர்பான களப்பணிகளை விரைவுப்படுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் அனைத்து மட்ட அளவில் தேர்தல் பணிக்குழு அமைப்பது, பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது உள்ளிட்டவைகளை மாநில, மாவட்ட கமிட்டிகள் விரைவுப்படுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. 2. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இருவேறு சம்பவங்களில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. கள்ளச்சாராயம் விற்பனை மூலம் உயிர் பலிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கள்ளச்சாராயம் பின்புலத்தில் உள்ள அனைவர் மீதும் பாரபட்சம் பாராமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ். டி. பி. ஐ. மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. 3. தமிழகம் முழுவதும் சமீபகாலமாக வியாபார நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தும் சமூகவிரோத கூட்டங்கள் ஆங்காங்கே தலை தூக்கி வருகின்றது. மாமூல் கேட்டு கட்டப்பஞ்சாயத்து செய்கிற சமூக விரோத கும்பலாலும், போதைக் கும்பல்களின் அட்டூழியங்களாலும் வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சி காந்திபுரம் மொத்த சந்தையில் 30க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று கடையை சூறையாடி உரிமையாளர், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த பணத்தையும் கொள்ளையடித்து சென்றது. அதேபோல் விழுப்புரத்தில் போதை கும்பல் ஒன்று கடை ஊழியர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்தது. இப்படியாக பல்வேறு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் இது நல்லதல்ல என்பதால், அரசு உடனடியாக தமிழகம் முழுவதும் இதுபோன்ற அத்துமீறிய செயல்களை காவல்துறை மூலம் இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்தி, வியாபார ஸ்தலங்களில் தகுந்த பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என எஸ். டி. பி. ஐ. கட்சி கேட்டுக்கொள்கிறது. 4. மாநில மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை இனி ஒன்றிய அரசே எடுத்து நடத்தும் என்று ஒன்றிய அரசின் மருத்துவச் சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாநிலங்களின் தன்னாட்சி அதிகாரத்தை அப்பட்டமாக பறிக்கும் ஒன்றிய அரசின் ஏதேச்சதிகாரப் போக்கின் வெளிப்பாடாகும். ஏற்கனவே தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நீட் தேர்வின் மூலம் தகர்த்து வரும் ஒன்றிய பாஜக அரசு, தற்போது மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வையும் மாநில அரசுகளிடமிருந்து பறித்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக அனைத்து மருத்துவக் கல்விக்கான இடங்களையும் ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டின்கீழ் கொண்டுச் செல்ல திட்டமிட்டுள்ளது தெரியவருகின்றது. இந்தியா முழுமைக்கும் பொதுவான ஒன்றாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும்போது மாநிலங்கள் அளித்துவரும் பல்வேறு வகையான இடஒதுக்கீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதன்படி தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கிவரும் 69% இடஒதுக்கீடு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7% இடஒதுக்கீடு உள்ளிட்டவை பறிக்கப்படும் சூழல் உருவாகும். ஆகவே, தமிழ்நாடு அரசு இதன் தீவிரத்தை உணர்ந்தும், தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மாநில உரிமை பறிப்பு ஆகியவற்றை தடுத்து நிறுத்தவும் சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, ஒன்றிய அரசு இந்த முடிவை கைவிட வேண்டும் எனவும் எஸ். டி. பி. ஐ. கட்சி கேட்டுக்கொள்கிறது.

தொடர்புடைய செய்தி