மார்த்தாண்டம்: வீடு புகுந்து பெண் வழக்கறிஞரை தாக்கியதாக குற்றச்சாட்டு
மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அகிலா தேவி. குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவருடைய கணவர் முத்தழகன் என்பவர் பெங்களூர் பகுதியை சேர்ந்த ஜினித் என்பவருக்கு தமிழக அரசின் டாஸ்மார்க் பார் நடத்துவதற்கு கடை ஒன்றை வாடகைக்கு எடுப்பதற்க்காக ஒரு லட்சம் ருபாயை கருங்கல் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜினித்துக்கு பார் நடத்த அனுமதி கிடைக்காததால் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதற்கிடையே ஜினித்திற்கு அறிமுகமான முன்னாள் அமைச்சர் மனோதங்கராஜின் சகோதரர் ஜெயன் தங்கராஜ் முத்தழகனிடம் பணத்தை திரும்ப கொடுக்க கேட்டு மிரட்டி உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் ஜெயன் தங்கராஜ் முத்தழகனின் வீட்டிற்கு வந்து தாக்குதல் நடத்தி உள்ளார். இதனை தட்டிக்கேட்ட பெண் வழக்கறிஞரையும் தாக்கி உள்ளார். இது குறித்து பெண் வழக்கறிஞர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். போலீசார் அங்கிருந்து ஜெயன் தங்கராஜை காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளனர். ஆனால் காவல்நிலையம் சென்றபோது அங்கு ஜெயன் தங்கராஜ் இல்லை. அவரை போலீசார் வரும் வழியிலேயே எந்த விசாரணையும் செய்யாமல் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் தனக்கு நீதி வேண்டும் என்று பெண் வழக்கறிஞர் காவல்நிலையம் முன் காத்திருந்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.