தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி சுப்புலாபுரம் கந்தநாதன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் 40 வயது. இவர் பெட் பாட்டில் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் இரண்டு மாதத்திற்கு முன்பு வருசநாடு தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த சுமன், ஈஸ்வரன், தர்மா, ராஜேஷ், முத்திஸ், சதீஷ் ஆகிய 6 பேரும் வேலைக்கு சேர்ந்து அங்கே தங்கி இருந்துள்ளனர்.
கம்பெனியில் பாட்டில்களை தயாரிக்கும் போது கழிவு பாட்டில்களை சரியான முறையில் எடுக்காததால், வாடிக்கையாளர்கள் பாட்டில்களை சரியான முறையில் அனுப்பும்படி கம்பெனியில் தெரிவித்துள்ளனர். இதனால் பணியாளர்களை முத்துராஜ் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஆறு பேரும் முத்துராஜை தாக்கி, அவர் வசம் இருந்த பணம் ரூபாய் 6000ஐ பறித்துள்ளனர். அவரது மொபைல் போனிலிருந்து ரூபாய் 30 ஆயிரத்தை மாற்றச் செய்தனர். அவரை அங்கேயே வேட்டியால் கட்டிப்போட்டு விட்டு வெளியே இருந்த இரு சக்கர வாகனத்தையும் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீசார் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.