தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு கட்டுப்பட்ட அருள்மிகு மூங்கிலணை ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில், மாசி மகாசிவராத்திரி திருவிழா வருகின்ற பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், நேற்று (பிப். 4) அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் திருக்கோவில் வளாகத்தில் கொடிக்கம்பம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. பரம்பரை நிர்வாக அறங்காவலர் தனராஜ் பாண்டியன், பரம்பரை அறங்காவலர் கனகராஜ் பாண்டியன், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் வேலுச்சாமி, பொதுமக்கள், பக்தர்கள், இந்து சமய அறநிலையத் துறை அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கோவிலில் எப்போதும் கதவு மூடியே இருக்கும். கதவுக்குப் பின்னால் அம்மன் இருப்பதாக ஐதீகம். பக்தர்கள் கதவை வணங்கியே செல்கின்றனர்.
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது தென் மாவட்டங்களில் உள்ள முக்கியமான அம்மன் கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மகா சிவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவார்கள்.