போடி ரயில் நிலையத்தில் சென்னை தென்னக ரயில்வே துணைப் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் எல். நாகேஸ்வரரావ் ஆகியோர் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை- போடிநாயக்கனூர் இடையே அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு தினசரி காலை, மாலை வேளைகளில் ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இதேபோல, போடிநாயக்கனூரிலிருந்து சென்னைக்கு வாரத்தில் மூன்று நாள்கள் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் போடிநாயக்கனூர்-மதுரை இடையேயான 90.4 கி.மீ. தொலைவு மின்மயமாக்கப்பட்டு மின்சார என்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போடிநாயக்கனூர்- மதுரை, போடிநாயக்கனூர்- சென்னை ரயில்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்து வருவதால் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
இதனால் கூடுதலாக மதுரை- போடிநாயக்கனூர், போடிநாயக்கனூர்- மதுரை, போடிநாயக்கனூரிலிருந்து சென்னை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ஊர்களுக்கு கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள், ரயில்வே ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.