ஆடுதுறையில் டீ தூள் குடோனில் தீ விபத்து - 40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மணிக்கார தெருவை சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் அகமது என்பவருக்கு சொந்தமான டீத்தூள் ஏஜென்சி, திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பிடாரன் தெரு பகுதியில் உள்ளது. இவரது உறவினரான ஹபீப் ரஹ்மான் என்பவர் இந்த ஏஜென்சியை எடுத்து நடத்தி வருகிறார். வாடகை கட்டிடத்தில் பொருட்கள் சேகரித்து வைக்கும் குடோனில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த ஹபீப்ரஹ்மான் திருவிடைமருதூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 40 லட்சத்திற்கும் மேல் டீ தூள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் முற்றிலுமாக சேதம் ஆகியுள்ளதாக ஹபீப்ரஹ்மான் தெரிவித்துள்ளார். தீ விபத்திற்கான காரணம் குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டீத்தூள் குடோனில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.