தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சாக்கோட்டை ஓத்த தெருவில் ராஜா என்பவர் சொந்தமாக பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு வீடுகள், அலுவலகங்களுக்கு தேவையான பல்வேறு வகையான பொருள்கள் உள்ளன. இதில் பிளைவுட், ரெக்சின் போன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இருந்தன. இந்த நிலையில், வழக்கம்போல் வெள்ளிக்கிழமை மாலை வேலை முடிந்ததும் உரிமையாளர் ராஜா கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
சனிக்கிழமை அதிகாலையில் பர்னிச்சர் கடையில் கரும்புகை கிளம்பியுள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கடையில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இருந்ததால் தீ மிளமிளவென கடை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போராடினர்.
பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் கூறினர். இதில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமானது.