திருவையாறு அய்யனார் கோவில் தெருவில் உள்ள ஆகாச மாரியம்மன் கோவிலில் 5 நாள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, முதல் நாளன்று காப்பு கட்டுதலும், 2-வது நாளில் பூச்சாரிதல் விழாவும் நடைபெற்றது. 3-வது நாளான நேற்று பால்குட விழா விமரிசையாக நடந்தது. முன்னதாக ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால்குடத்தை தலையில் சுமந்தும், தீச்சட்டியை கையில் ஏந்தியவாறு திருவையாறு காவேரி ஆற்றில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், மூலவருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் தெருவாசிகள் செய்திருந்தனர்.