காவிரிப் பாசன மாவட்டங்களில் ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் விவசாயம் தழைத்தோங்குவதற்காக வயல்களில் விவசாயிகள் வழிபாடு செய்து, விவசாயப் பணிகளைத் தொடங்குவது வழக்கம். இயந்திரமயமாக்கல், கால்நடை வளர்ப்பு குறைவு போன்ற காரணங்களால் நல்லோர் பூட்டி வழிபடுவது குறைந்து, சில ஆண்டுகளாக டிராக்டர்களை வைத்து வழிபடப்படுகிறது.தஞ்சாவூர் அருகே ராவுசாபட்டி கிராமத்தில் விவசாயிகள் வயலுக்குச் சென்று பழங்கள், அரிசி, விதை நெல், நவதானியம் உள்ளிட்டவற்றை வைத்து, சூரிய பகவானை வழிபட்டனர். பின்னர் டிராக்டர்கள் மூலம் வயலை உழுது விவசாயப் பணிகளைத் தொடங்கினர்.இதேபோல், அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச் சேரி ஊராட்சி, பட்டுக்குடி கிராமத்திலும் நல்லேறு பூட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராவூரணி அருகே மாவடுகுறிச்சியில் காஞ்சி ஸ்ரீ சங்கர மட கிளை நிர்வாகி ஜி. ஆர். ஸ்ரீதர் தலைமையில், சித்திரை முதல் நாள் பொன்னோர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.