தஞ்சை: மாமன்ற உறுப்பினரை அரிவாளால் வெட்டிய இளைஞர் கைது
தஞ்சாவூரில் திமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினரை அரிவாளால் வெட்டிய இளைஞரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் வடக்கு வாசல் ஏ. ஒய். ஏ. நாடார் சாலையைச் சேர்ந்தவர் எஸ். விஜய் பாபு (42). திமுகவைச் சேர்ந்த இவர் 7 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதை சமாதானப்படுத்துவதற்காக விஜய் பாபு சென்றார். அப்போது விஜய் பாபு, அவருடன் இருந்த காந்தி என்கிற மணிகண்டன், வீரராகவன், ஆனந்த் அரிவாளால் வெட்டப்பட்டனர். காயமடைந்த 4 பேரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெற்றனர். இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த குழந்தையப்பன் மகன் கார்த்திக்ராஜாவை (23) திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.