தஞ்சாவூரில் சிஐடியு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில், மாநகராட்சி அலுவலகம் முன்பு, சிஐடியு மாவட்ட துணை செயலாளர் கே. அன்பு தலைமையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, சிஐடியு மாவட்ட செயலாளர் சி. ஜெயபால் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் மாநகராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளர்களாக சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்கள் குடும்ப தேவைக்காக மாநகராட்சி மூலம் கூட்டுறவு மற்றும் கடன் சங்கத்தின் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கடன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் தூய்மைப் பணியாளர்கள் பெற்ற கடன் தொகை மாதம் தோறும் சம்பளத்திலிருந்து மாநகராட்சி மூலம் வட்டியுடன் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சியால் பிடித்தம் செய்யப்படும் பணம் கூட்டுறவு சங்கத்தில் செலுத்தாத காரணத்தால், தூய்மைப் பணியாளர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டு வருகிறது. எனவே, தூய்மைப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த 10 கோடியே 12 லட்சம் ரூபாயை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கூட்டுறவு சங்கத்திற்கு செலுத்த வேண்டும். ஓய்வு பெற்று பணிக்கொடையில் கடனுக்காக சின்னம்மாள் என்பவரிடமிருந்து 4 லட்சத்து 14 ஆயிரத்து 873 ரூபாயை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.