தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அருகே திங்கள்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதி, பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம், வடுவூா் தென்பாதி, தேவன் தெருவேச் சோ்ந்தவா் திருப்பதி. இவரது மனைவி இளவரசி (42). தம்பதி தஞ்சை மாவட்டம், கோவிலூா் பகுதியில் உணவகம் நடத்தி வருகின்றனா். இவா்கள் தங்களது சொந்த ஊரில் புதிய வீடு கட்டி, வரும் வெள்ளிக்கிழமை கிரகப்பிரவேசம் வைத்துள்ளனா்.
இதற்காக அழைப்பிதழ் கொடுப்பதற்காக தம்பதியினா், திங்கள்கிழமை இரவு தஞ்சை, சாலியமங்கலம் அருகே முனியாண்டவா்கோவில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது எதிரே வந்த பேருந்தின் முகப்பு விளக்கின் வெளிச்சம், வாகனத்தை ஓட்டிச் சென்ற திருப்பதியின் கண்ணை கூசச்செய்ததால், அவா் நிலை தடுமாறி மோட்டாா் சைக்கிளை அருகே இருந்த மணல்மேட்டில் மோதினாா். இதில், இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது பின்னால் வந்த திருச்சி-வேளாங்கண்ணி அரசுப் பேருந்து, இளவரசியின் மேல் ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்த இளவரசி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருப்பதி சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற அம்மாபேட்டை போலீஸாா் உயிரிழந்த இளவரசியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.