தந்தை இறந்த சோகத்திலும் பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவன்

66பார்த்தது
தந்தை இறந்த சோகத்திலும் பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவன்
தந்தை இறந்த நிலையிலும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் செயல் பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் எம். கே. மூப்பனார் சாலை பண்டாபி அக்ரகாரத்தை சேர்ந்தவர் பாலகுமார் (55). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கமலாதேவி(52). இவர்களின் மகன்கள் சங்கரநாராயணன்(20), தேவன்(14).
இதில் சங்கரநாராயணன் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இளைய மகன் தேவன் தஞ்சாவூரில் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது தேவனுக்கு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு 7 மணி அளவில் பாலகுமார் காலமானார். தன் தந்தை இறந்த சோகத்திலும் வியாழக்கிழமை காலை அறிவியல் தேர்வு எழுத கண்ணீருடன் தேவன் பள்ளிக்குச் சென்றார்.

இதனால் மகன் வந்த பின்னர் தந்தை பாலகுமாரின் உடலை எடுப்பதற்காக உறவினர்கள் காத்திருந்தனர்.
பள்ளியில் வியாழக்கிழமை மதியம் தேர்வு முடிந்து மிகுந்த மன வருத்தத்துடன் சீருடைலேயே மாணவன் தேவன் அழுதபடி வந்தான். அதன்பிறகு பாலகுமாரின் உடலை இறுதிச் சடங்குக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தந்தை இறந்த நிலையிலும் தேர்வு எழுத மாணவன் சென்றது அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி