தஞ்சாவூர் அருகே மின்னல் தாக்கி பெண் பலியானார். 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரக்கோட்டை நத்தம் பகுதியை சேர்ந்தவர்கலைச் செல்வம். இவரது மனைவி சரிதா (50). கலைச்செல்வம் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் சரிதா தனது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சரிதாவின் மகள் திருமணம் வரும் 10ஆம் தேதி நடைபெறுவதையொட்டி உறவினர்களுக்கு பத்திரிக்கை வைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
நேற்று முன்தினம் உறவினர்களுக்கு திருமண பத்திரிக்கை வைத்துவிட்டு ஒரத்தநாட்டில் இருந்து தலையாமங்கலத்திற்கு ஸ்கூட்டியில் சென்றார். அப்போது அப்பகுதியில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் கண்ணந்தங்குடி மேலையூர் வண்டி பாலம் பகுதியில் வண்டியை நிறுத்தி விட்டு சாலை ஓரம் இருந்த மரத்தடியில் மழைக்காக ஒதுங்கியுள்ளார்.
அப்போது மின்னல் தாக்கியதில் சரிதா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் அருகில் நின்று கொண்டிருந்த கக்கரக்கோட்டையை முருகேசன், சங்கர், சேகரன், சீதாலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் 4 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஓரத்தநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.