உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், பள்ளிக்கல்வித்துறை, கவின்மிகு தஞ்சை இயக்கம் ஆகியவை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் பிரியங்கா தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும், சுற்றுச்சூழலை பேணி பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து அனைவருக்கும் மஞ்சள்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது பள்ளி மாணவி ஒருவரை அழைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்குமாறு கூறினார். இதன்படி மாணவியுடன் இணைந்து கலெக்டர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நெகிழியை தவிர்ப்போம், மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.