நாட்டின் முன்னோடி வங்கியான பாங்க் ஆப் பரோடா நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் சேவை செய்கிறது. இதன் ஒருபகுதியாக பரோடா வங்கி, விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களை ஒன்றிணைக்கும் வகையில் ஆண்டுதோறும் உழவர் திருவிழா நடத்துகிறது.
இவ்வகையில் 7வது ஆண்டாக பரோடா வங்கி உழவர் திருவிழா தஞ்சாவூரில் நடைபெற்றது. விழாவில், வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மண்டல மேலாளர் சரவணக்குமார் பேசுகையில் "விவசாயிகள் வங்கியின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி, வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
விழாவில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8 கோடி 45 லட்சம் மதிப்பில் கடன் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. தஞ்சாவூர் நிப்டெம் பதிவாளர் சண்முகசுந்தரம், வேளாண் துறை இணை இயக்குனர் வித்யா மோகன், பாரத் கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குனர் புனிதா கணேசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பரோடா வங்கி தஞ்சை கிளையின் முதன்மை மேலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார், புதுச்சேரி பிராந்திய தலைவர் ரவி நன்றி கூறினார்.