தஞ்சாவூர், பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா, நவராத்திரி விழா, சதய விழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டுக்கான 23வது ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா கடந்த மாதம் 25ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
11 நாட்கள் நடந்த இந்த விழாவில் தினமும் வாராகி அம்மனுக்கு காலையில் அபிஷேகமும் தொடர்ந்து இனிப்பு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்தன. நிறைவு நாளான நேற்று 5ம் தேதி வராகி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலை வாண வேடிக்கையுடன் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வராஹி அம்மன் எழுந்தருளி 4 ராஜவீதிகளில் வீதிஉலா நடந்தது. தொடர்ந்து பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.