தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாசி சிவராத்திரி, மாசி மகம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது, கும்பகோணம் மாசி மகம் திருவிழா வருகிற 24-ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அதேபோல் பெருவுடையார் கோவில் மாசி சிவராத்திரி விழா வருகிற மார்ச் எட்டாம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மாநகராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை, சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டு துறை, போக்குவரத்து துறை, மின்சார துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு துறை வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்தனர். பொதுமக்கள் பக்தர்களுக்கு எந்தவித இடையரும் இல்லாத வகையில் தேவையான அனைத்து வசதிகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யுமாறு ஆட்சியர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், வருவாய் கோட்டாட்சியர்கள் பூர்ணிமா, இலக்கியா மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.