தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், திங்கள்கிழமை முத்தமிழ் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராகத் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி அவர்கள் இயற்றமிழ் உரையாகப் 'பாட்டும் பின்னணியும்' என்ற பொருண்மையில் திரைக்கு வந்து வெற்றி பெற்றுள்ள பாடல்கள் உருவாகிய பின்னணி குறித்துப் பகிர்ந்து கொண்டார். தமிழ் இலக்கியப் பரப்பில் காணப்படும் இலக்கிய வளமைகள் குறித்துப் பேசியதுடன், வாழ்வோடு ஒன்றி வரும் நிகழ்வுகளும் அனுபவங்களும் பாடல் எழுதுவதற்கு ஊற்றாய்ச் சொற்களை வழங்கும் தன்மையுடையன. கல்வியே ஒருவரை அடுத்தடுத்த உயர்வுக்குக் கொண்டு செல்லும் தன்மையுடையது. "கல்வியைப் பற்றிக் கொண்டு உயருங்கள்" என்றார்.
இசைத் தமிழ் நிகழ்வில் சூப்பர் சிங்கர் வெற்றியாளர் இர. பிரித்திகா திரையிசைப் பாடல்களைப் பாடினார். தமிழ்த்துறை மாணவிகள் 'நவீன குண்டலகேசி' என்ற பெண்களுக்கான விழிப்புணர்வு நாடகத்தினை அரங்கேற்றினர். கல்லூரி முதல்வர் அ. ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்ற விழாவில், தேர்வு நெறியாளர் தெ. மலர்விழி, தமிழ்த்துறைத் தலைவர் சீ. வைஜெயந்திமாலா மற்றும் தமிழ்த்துறை, பிற துறை பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில், முன்னதாக தி. ஹேமலதா வரவேற்றார். வெ. அமுதா நன்றி கூறினார். நிகழ்ச்சித் தொகுப்பை முதுகலைத் தமிழ்த்துறை மாணவி கு. சுவாதி வழங்கினார்.