காவிரி ஒருமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், பருவமழை அதிகமாக பெய்ததால் ஜூன் ஜூலை மாதங்களுக்குரிய காவிரி நீர் கர்நாடகத்திலிருந்து வந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கு 45. 95 டிஎம்சி தண்ணீர் வரவேண்டும். இந்த அளவு நீரை கர்நாடக திறப்பது தொடர்பாக காவிரி ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் ஒழுங்காற்றுக் குழுவின் முடிவை கர்நாடக அரசு செயல்படுத்த முடியாது என துணை முதல்வர் டி கே சிவகுமார் அறிவித்தார். அதன்பிறகு கர்நாடக முதல்வர் சித்தராமையா அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி ஒழுங்காற்று குழு ஆணையை செயல்படுத்த மாட்டோம் என்றார். கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையிலும் காவிரி ஒழுங்காற்று குழு ஆணையை செயல்படுத்த மறுத்த கர்நாடக அரசின் சட்டவிரோத செயல் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஏன் கூறவில்லை. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் என்ன அறிவுறுத்தியுள்ளார். இதற்கான விளக்கத்தை விவசாயிகள் எதிர்பார்க்கின்றன" இவ்வாறு தெரிவித்துள்ளார்.