சர்வதேச சிலம்பாட்ட போட்டியை மலேசியா நாட்டின், சிலாங்கூர் மாநிலம், செம்பாங் மாவட்டம், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பந்தர் பாரு சலாக் திங்கி உள் விளையாட்டு அரங்கத்தில் சென்ற வாரம் நடத்தியது.
பல்வேறு நாடுகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளும் 50க்கு மேற்பட்ட சர்வதேச நடுவர்களும் கலந்து கொண்டனர். மே 25 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் ஒற்றை கம்பு, ஈட்டி, குத்து வரிசை, வாள் கேடயம் மற்றும் சிலம்பச் சண்டை போட்டி பல்வேறு வயதுப்பிரிவுகளிலும், உடல் எடைப் பிரிவுகளிலும் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தை சேர்ந்த தேசிய மற்றும் சர்வதேச நடுவர் கரந்தை பரமேஸ்வரி, கரந்தை ருத்ரன் சிலம்ப பள்ளி நிறுவனர் கார்த்திக், மாணவர்கள் விவேக், சூரிய பிரகாஷ், தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக அணி மேலாளராக தஞ்சை ஜலேந்திரன் ஆகியோர் மலேசியா சென்றிருந்தனர்.
21 முதல் 30 வயதினருக்கான போட்டியில் 59 முதல் 68 கிலோ வரை உள்ள உடல் எடைப்பிரிவில் கலந்து கொண்ட தஞ்சை விவேக் சிலம்ப சண்டை போட்டியிலும், குத்து வரிசை போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றார்.
சப் ஜூனியர் பிரிவு 13 முதல் 15 வயதினருக்கான போட்டியில் 44 முதல் 53 கிலோ வரை உள்ளஉடல் எடைப்பிரிவு குத்து வரிசை போட்டியில் தஞ்சை, சூரிய பிரகாஷ் கலந்து கொண்டு தங்கப்பதக்கம், சிலம்பத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார்.