காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரிக் கரையோர கிராமங்களில் எச்சரிக்கை செய்தும் விதமாக இந்திய செஞ்சிலுவை சங்கத்தினர் புதன்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு புதன்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியில் அதிக அளவு தண்ணீர் வருவதால் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காவிரிக் கரையோர கிராம மக்களுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தினர் புதன்கிழமை விழிப்புணர்வு எச்சரிக்கை செய்தனர்.
இந்த பிரசாரத்தை செஞ்சிலுவை சங்கத்தின் திருவையாறு தலைவர் மு. கலைவேந்தன் தொடங்கி வைத்தார். பயோ கேர் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் அந்தோணி செல்வம், இளங்கோவன் உள்ளிட்டோர் மகாராஜபுரம், சாத்தனூர், ஆச்சனூர், வடுகக்குடி, மருவூர், புனவாசல், வைத்தியநாதன்பேட்டை உள்ளிட்ட காவிரிக்கரையோர கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். மேலும், காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, ஆடு, மாடுகளை மேய்க்கவோ, தண்ணீரில் விளையாடவோ கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.