தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கீழ திருப்பந்துருத்தி கிராமத்தில், குடமுருட்டி ஆற்றில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக மணல் எடுத்து, கண்டியூரில் மணல் சேமிப்பு குடோனில் கொட்டி வைத்து வருகிறார்கள்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைச்செயலாளர் சுகுமாறன், கிராம மக்கள் ரமேஷ், கமலக்கண்ணன், ராஜா ஆகியோர் தலைமையில் விவசாயிகள், குடமுருட்டி ஆற்றில் மணல் அள்ளிய பொக்லைன் இயந்திரங்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த கீழ திருப்பந்துருத்தி கிராம நிர்வாக அலுவலர் அபிஷேக் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மணல் அள்ளுவதை நிறுத்தி விட்டு, பொக்லைன் இயந்திரங்களை அங்கிருந்து எடுத்து சென்றதால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இதற்கிடையில், அப்பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர், ஆற்றில் நாணல் அதிகளவில் மண்டி, மணல் மேடாக இருப்பதால், மணலை அள்ளினால், தண்ணீர் எங்கள் பகுதி வாய்க்காலுக்கு வரும் என கூறி, மணல் அள்ள வேண்டும் என கூச்சலிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.